நாகப்பட்டினத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது பழங்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை நீலாவடக்கு வீதியைச் சேர்ந்த ராம்பிரசன்னாவுக்கு சொந்தமான இடம் புதிய கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. அங்கு கட்டுமானப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை காலை பள்ளம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சுமார் 2 அடி உயரம் கொண்ட வெண்கலச் சிலை ஒன்று மண்ணுக்குள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிலையில் சிவன், பார்வதி மற்றும் சிறிய உருவத்தில் முருகன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், சுமார் 2 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையின் பின்புற வளைவு அமைப்பைக் கொண்ட மற்றொரு வெண்கலப் பொருளும் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிலைகளை ஆய்வு செய்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
பின்னர், கண்டெடுக்கப்பட்ட வெண்கலச் சிலைகள் நாகை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தச் சிலைகள் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை, அவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன என்பது குறித்து தொல்லியல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
