தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை மையமாகக் கொண்டு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பாரதத்தின் மிகப் பழமையான மற்றும் புனிதமான சிவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் காசி விஸ்வநாதர் ஆலயம் பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. காசி ஆலயம் பலமுறை தாக்குதல்களால் சேதமடைந்த பின்னர், தென்பாண்டிய நாட்டில் தட்சிண காசியாக தென்காசி விஸ்வநாதர் ஆலயம் நிறுவப்பட்டதாக கல்வெட்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தென்காசி பஜார் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எம்.எஸ். ஹாஜா மொகைதீன் என்பவர் பெயரில் 2025 செப்டம்பரில் மாவட்ட ஆட்சியரிடம் புதிய மசூதி கட்ட அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடம் காசி விஸ்வநாதர் கோவில் சன்னதி பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பஜார் ஜும்மா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலம் கோவிலுக்கு சொந்தமானது என உள்ளூர் ஹிந்துக்கள் நீண்டகாலமாகக் கூறி வருகின்றனர். இந்த நிலம் தொடர்பாக நீதிமன்றமும் கோவிலுக்கு சாதகமாக உத்தரவு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அந்த பள்ளிவாசலின் பெயரில் புதிய மசூதி கட்ட அனுமதி கோரப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தென்காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ஆண்டுதோறும் எண்ணெய் வழங்கும் கட்டளை இருப்பதாகவும், 1.71 சென்ட் நிலத்தை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மசூதி கட்ட கோரப்பட்டுள்ள பகுதி பூக்கடை பஜார் அருகே அமைந்துள்ளது. அதன் வடக்கில் ஸ்வாமி சன்னதி தெருவும், தெற்கில் அம்மன் சன்னதி தெருவும் உள்ளன. கோவில் திருவிழாக்களின் முக்கிய ஊர்வலப் பாதைகளாக இந்த சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கோரிக்கைக்கு நிர்வாகம் ஆதரவான முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடையே விவாதம் அதிகரித்துள்ளது. கோவில் அருகே புதிய மசூதி கட்ட அனுமதி வழங்கப்படுவது குறித்து எதிர்ப்பும் ஆதரவும் வெளிப்பட்டு வருகின்றன.
