லண்டன்: உலகம் முழுவதும் கைவிடப்படும் கப்பல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்திய மாலுமிகள் என்பதும் கவலைக்கிடமான தகவலாக வெளிவந்துள்ளது.
கப்பல் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கும்போதோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட கப்பல் உரிமையாளர்கள் கைது செய்யப்படும்போதோ, அந்தக் கப்பல்கள் நடுக்கடலில் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நிலை உருவாகிறது.
பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு உலகளவில் 410 கப்பல்கள் கைவிடப்பட்டுள்ளன. அந்தக் கப்பல்களில் பயணித்த 6,223 மாலுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்திய மாலுமிகளே அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1,125 இந்திய மாலுமிகள் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 32 சதவீதம் அதிகமாகும்.
உலக அளவில் மாலுமிகளை அதிகமாக வழங்கும் நாடுகளில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதால், இந்த தகவல் இந்திய கடல்சார் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மங்கோலிய கொடியுடன் இயங்கிய ‘அஸ்ரா சி’ என்ற சரக்கு கப்பல், துருக்கியின் இஸ்தான்புல் கடற்பகுதியில் கைவிடப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த நான்கு இந்திய மாலுமிகள் சுமார் 10 மாதங்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி கடுமையாக அவதிப்பட்டனர்.
கப்பலின் உரிமையாளர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாலுமிகளின் நிலைமை மோசமடைந்தது. நீண்டகால போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு அவர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மாலுமிகளை ஏமாற்றும் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடும் கப்பல் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களை மத்திய அரசு கருப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
