4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை செய்து வந்த பெண் கலிதா மாஜி, தற்போது மேற்கு வங்க மாநில அமைச்சராக பதவியேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகமாக மாறியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பேற்றார். 37 வயதான அவர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட ஆஸ்கிராம் தொகுதியில் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றிருந்தார்.
2006ஆம் ஆண்டு பிளம்பர் தொழிலாளியை திருமணம் செய்து கொண்ட கலிதா மாஜி, பல ஆண்டுகளாக குஸ்காரா பகுதியில் வீட்டு வேலைக்காரியாக பணியாற்றினார். சுத்தம் செய்தல், சமையல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மாதம் ரூ.4,000 வருமானம் ஈட்டி வந்தார். தனது அரசியல் பயணத்திற்கு பிரதமர் மோடியின் வாழ்க்கை உத்வேகமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்ற பிறகு பேசிய கலிதா மாஜி, வீட்டு வேலை செய்து கொண்டிருந்த காலத்திலும் பாஜக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றதாக கூறினார். தனது தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை, சுகாதார வசதியின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகவும், ஒரு மருத்துவமனை அமைப்பதே தனது முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாணவிகள் பாதுகாப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சூழலை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வீட்டுப் பணியாளரும் அரசியல்வாதியாக உயர முடியும் என்று கூறியிருந்த நிலையில், அது தற்போது நனவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட விரும்புவதாகவும், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதாகவும் கலிதா மாஜி தெரிவித்தார். வீட்டு வேலைக்காரியிலிருந்து மாநில அமைச்சராக உயர்ந்த அவரது பயணம் மேற்கு வங்க அரசியலில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
