புதுடெல்லி: நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) செயல்பாடு குறித்து கவலை தெரிவித்ததுடன், யு.பி.எஸ்.சி. போன்ற அமைப்புகளிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
நீட் பொதுத்தேர்வு கடந்த ஜூன் 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் சமூக வலைதளங்கள் மூலம் கசிந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்ததுடன், ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது, தேசிய தேர்வு முகமை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் எந்தவித தவறும் நிகழக்கூடாது என்று எச்சரித்தனர்.
மேலும், தனிநபர்களின் திறமையை விட தேர்வுகளை நடத்தும் அமைப்பின் கட்டமைப்பு மற்றும் நம்பகத்தன்மை முக்கியம் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பெரிய அளவிலான போட்டித் தேர்வுகளை வினாத்தாள் கசிவு போன்ற சர்ச்சைகள் இல்லாமல் நடத்தி வரும் யு.பி.எஸ்.சி. போன்ற அமைப்புகளிடமிருந்து தேசிய தேர்வு முகமை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
எதிர்காலத்தில் எந்தவித களங்கமும் இன்றி தேர்வுகளை நடத்தும் திறனை பெறும் வகையில், தகுதியான பணியாளர்களை நியமித்து அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் நாட்டின் இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் முக்கிய பிரச்னை என்றும், இதனை மத்திய அரசு மிகுந்த தீவிரத்துடன் கையாள்ந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
