மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூரில் டாஸ்மாக் கடை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, அந்தக் கடையை உடனடியாக மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், “மதுபானம் விற்கலாம்; ஆனால் சுயமரியாதையையும் மனசாட்சியையும் விற்க முடியாது” என நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பெருமகளூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், நேதாஜி நகரில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனைகள் அளிக்கப்பட்டிருந்தும் அவற்றை பரிசீலிக்காமல் மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கிலும், 100 மீட்டர் சுற்றளவில் பள்ளி அல்லது வழிபாட்டுத் தலம் இல்லையென உறுதி செய்த பிறகே இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னரே கலெக்டர் அனுமதி வழங்கியதாகவும் வாதிட்டார்.
இந்நிலையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் பெறப்பட்டிருந்தால் அவற்றை கலெக்டர் முறையாக பரிசீலிக்காமல் அனுமதி வழங்கக் கூடாது என விதிமுறைகள் கூறுவதாக சுட்டிக்காட்டினார்.
கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் ஆட்சேபனைகளை விசாரிக்க டி.ஆர்.ஓ.வை கலெக்டர் நியமித்தது தெரியவந்துள்ளது. ஆனால், டி.ஆர்.ஓ.வின் அறிக்கையை பெறாமலேயே வாய்மொழி தகவல்களின் அடிப்படையில் கலெக்டர் முடிவெடுத்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அளித்த மனுவின் அடிப்படையிலேயே கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அருகிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் கடைக்கு சென்று திரும்பும் நபர்களால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் பெருமகளூரில் கடை அமைக்க வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை வைத்திருந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதுதொடர்பாக, அருகிலுள்ள கடைக்கு மது அருந்தச் செல்லும் நபர்களால் எத்தனை வழிப்பறி மற்றும் விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்ற விவரங்களை சமர்ப்பிக்குமாறு பேராவூரணி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, வழிப்பறி சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சில விபத்துகள் மது அருந்திவிட்டு திரும்பியவர்களுடன் தொடர்புடையவை அல்ல என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, கலெக்டரின் அலட்சியமான அணுகுமுறை நீதிமன்றத்தின் மனச்சாட்சியையே அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட காரணங்கள் மாநிலத்தையும் அதன் மக்களையும் அவதூறாக சித்தரிக்கும் வகையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் கடமை என்றும், விதிமுறைகளை பின்பற்றாமல் மது விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு அவசரகதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, பெருமகளூரில் டாஸ்மாக் கடை திறக்க வழங்கப்பட்ட கலெக்டரின் அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கலெக்டர் நிர்ணயிக்கும் தேதியில் மனுதாரர் மற்றும் ஆட்சேபனை அளித்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், சட்டப்படி விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியது.
அத்துடன், மாதர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை விசாரணைக்கு ஆஜர்படுத்தி, அவர்கள் முன்வைத்த வழிப்பறி மற்றும் வாகனங்கள் காணாமல் போனதாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் குறித்து கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
