35-40% வழக்கறிஞர்கள் போலி பட்டம் பெற்றவர்கள்? பார் கவுன்சில் தலைவர் அதிர்ச்சி தகவல்
புதுடில்லி: நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களில் 35 முதல் 40 சதவீதம் பேர் போலி பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம் என்று மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நீதிமன்றங்களில் வழக்கறிஞர் உடையுடன் செயல்பட்டு வருபவர்களில் 35 முதல் 40 சதவீதம் பேர் போலி பட்டங்களை பயன்படுத்தி வருவதாக பார் கவுன்சிலுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் போலியான கல்விச் சான்றிதழ்களை பெற்றிருக்கலாம் அல்லது சட்டவிரோதமான முறையில் தயாரித்து பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, வழக்கறிஞர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் பட்டங்களை சரிபார்க்கும் பணியை பார் கவுன்சில் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, வழக்கறிஞர்கள் தங்களது விவரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இதுவரை சுமார் 40 சதவீதம் பேர் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்தப் பிரிவினரிடையே போலி பட்டதாரிகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து இந்திய தலைமை நீதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், போலி பட்டங்களை பயன்படுத்தி வழக்கறிஞர் உடை அணிந்து நீதிமன்றங்களில் செயல்படுபவர்களையே தலைமை நீதிபதி “கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள்” என்று குறிப்பிட்டதாகவும் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
