முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் திமுக வெற்றி சாத்தியமில்லை: காதர் மொய்தீன் பேச்சு
சென்னை: கூட்டணி ஆட்சி என்ற அரசியல் நடைமுறையை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி வைத்துள்ளதாகவும், அது இனி எதிர்காலத்திலும் தொடரும் என்றும் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தவெக அமைச்சரவையில் முஸ்லிம் லீக் மற்றும் விசிக இடம்பெற்றது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா விமர்சனம் முன்வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த காதர் மொய்தீன் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “எங்களுடைய வாக்குகள் இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது. திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் கணக்கிட்டு பார்த்தால், முஸ்லிம் சமுதாயத்தின் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். எங்கள் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்கலாம்” என்றார்.
மேலும், “எங்களை விமர்சிப்பது தேவையற்ற ஒன்று. எங்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. எங்களை விமர்சித்தால் அதற்கான பதிலையும் நாங்கள் தருவோம்” என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவையில் இடம்பெற்றதால் கூட்டணியை முறித்துவிட்டோம் என்று எங்கும் கூறவில்லை என்றும், கூட்டணிகள் தொடர்பான முடிவுகள் தேர்தல் காலத்தில் எடுக்கப்பட வேண்டியவை என்றும் அவர் விளக்கமளித்தார்.
தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி என்ற மரபு இல்லை என்றும், தற்போது தமிழக வெற்றிக் கழகம் அதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் காதர் மொய்தீன் கூறினார்.
“ஒருமுறை இந்த நடைமுறை தொடங்கிவிட்டால் அது தொடர்ந்து வளர்ச்சியடையும். அரசியல் கட்சிகள் அதைப் பற்றி சிந்திப்பார்கள். காலப்போக்கில் கூட்டணி ஆட்சி என்பது இயல்பான ஒன்றாக மாறும். அந்த வகையில் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை விஜய் உருவாக்கியுள்ளார் என்று நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
மேலும், “திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதுகுறித்து திமுக தரப்பிலிருந்தும் எங்களிடம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன” என்றும் காதர் மொய்தீன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
