தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை; தேவையான கையிருப்பு உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை: தமிழகத்தில் மின்தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு மின்சாரம் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏற்படும் மின்தடைகள் குறித்து மின்வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். சில பகுதிகளில் மின்சார சுமை குறைவாகவும், சில இடங்களில் அதிகமாகவும் இருப்பதால் டிரிப்பிங் பிரச்னைகள் ஏற்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
திடீர் கோளாறுகளை சமாளிக்கும் வகையில் சென்னையில் மட்டும் பொறியாளர்கள் அடங்கிய ஏழு விரைவு நடவடிக்கை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார பிரச்னை ஏற்படும் பகுதிகளுக்கு உடனடியாக சென்று பழுதுகளை சரிசெய்து வருவதாகவும் கூறினார். இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து அதிகாரிகளும் துணை மின்நிலையங்களை நேரில் ஆய்வு செய்து வருவதாகவும், பல இடங்களில் பழைய டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் கேபிள் கோளாறுகள் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், சில இடங்களில் தனிநபர்களால் மின்விநியோகம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக மின்வாரியம் நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ரூ.2.50 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாகவும் தெரிவித்தார். 1.40 லட்சம் பணியிடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பழைய டிரான்ஸ்பார்மர்கள் மாற்றுதல், புதிய துணை மின்நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த காலங்களில் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், தற்போது அவற்றை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்துறையில் பெரும்பாலான ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், மிகச் சிலர் மட்டுமே விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் கூறினார். பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கால் சென்டர்கள் செயல்பட்டு வருவதாகவும், பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சூரிய மின்உற்பத்தி திட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் சில முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், வரும் திங்கட்கிழமை முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகவும், அனைத்து குறைகளையும் சரிசெய்து மின்வாரியத்தை மீட்டெடுக்கும் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
