கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர பாஜ உறுதி – எல்.முருகன்
சென்னை: கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதில் பாஜ உறுதியுடன் செயல்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் சூலூரில் சமூக விரோதிகள் இருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்றார். அவருடன் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் குழந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட பாஜ தலைவர் ஹரிராமன், சுற்றுச்சூழல் பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட மத்திய அமைச்சர் எல். முருகன், “இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதில் பாஜ உறுதியுடன் இருக்கும் என்பதை குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
