புதுடில்லி: பூச்சிகளின் பெயரில் அரசியல் கட்சிகளை உருவாக்கி இந்திய ஜனநாயகத்தை கேலிக்குரியதாக மாற்றக் கூடாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலையில்லா இளைஞர்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற கிண்டல் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் இளைஞர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றதுடன், அதன் சமூக வலைதளப் பக்கத்தை ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு இந்த இயக்கத்திற்கு தடை விதித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், பூச்சிகளின் பெயரில் கட்சிகளைத் தொடங்கி ஜனநாயகத்தை கேலி செய்யக் கூடாது என்று கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களே தங்களது பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்து ஆட்சியை அமைக்கிறார்கள். அரசாங்கம் நாட்டின் நலனுக்காக செயல்படுகிறது. எனவே விலங்குகள் அல்லது பூச்சிகளின் பெயர்களில் கட்சிகளை உருவாக்கி இந்திய ஜனநாயகத்தை கேலிப் பொருளாக மாற்றக் கூடாது” என்றார்.
மேலும், “இந்தியாவின் ஜனநாயகம் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. இந்திய மக்கள் விவேகமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள். அதனால் ஜனநாயகம் இந்த வகையில் கேலி செய்யப்படக் கூடாது” என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், “யாரும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம். அரசின் கொள்கைகளை விமர்சிக்கலாம் அல்லது ஆதரிக்கலாம். அது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் ஜனநாயக அமைப்பையே கேலி செய்வதோ, அவமதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய செயல்கள் ஜனநாயகத்தின் மதிப்பை பாதிக்கும்” என்று கிரண் ரிஜிஜு கூறினார்.
