திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கோயில்களில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் ரமேஷ், இன்று அதிகாலை திருச்செந்தூர் கோயிலுக்கு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
கோயிலுக்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு, முகக்கவசம் அணிந்தபடி தனது உதவியாளருடன் சாதாரண பக்தர் போல கோயிலுக்குள் நுழைந்தார். பின்னர், விரைவாக தரிசனம் செய்ய என்ன வழிமுறை உள்ளது என கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் உதவியாளர் மூலம் விசாரிக்கச் செய்தார்.
அப்போது, சிறப்பு தரிசன ஏற்பாட்டிற்காக ஒருவருக்கு ரூ.1,000 வீதம் நான்கு பேருக்கு மொத்தம் ரூ.4,000 வழங்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் ரமேஷ் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், குறிப்பிட்ட தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அனுப்பியதாகவும், பின்னர் அதற்கான ஆதாரங்களை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, கோயில் அலுவலகத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு எழுத்துப்பூர்வமாக பதில் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கோயிலின் வருவாய், சொத்து பராமரிப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பணிகள் நிறைவடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
