புதுடில்லி: சட்டவிரோத ஊடுருவல் மற்றும் இயற்கைக்கு மாறான மக்கள்தொகை மாற்றங்கள் நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு முக்கிய சவாலாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அதனால் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு உயர்நிலை குழுவை அமைத்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் Narendra Modi, மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி Prakash Prabhakar Naolekar தலைமையிலான இந்த குழுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் டாக்டர் ஷாமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார்.
மக்கள்தொகை மாற்றம் என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல என்றும், அது நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூக அமைப்பு மற்றும் பழங்குடியின சமூகங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் தொடர்புடையது என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழு, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை மாற்றங்களை விரிவாக ஆய்வு செய்யும். மேலும், மத மற்றும் சமூக அடிப்படையிலான அசாதாரண மக்கள்தொகை இடப்பெயர்வு போக்குகளை பகுப்பாய்வு செய்து, அதற்கான தீர்வு பரிந்துரைகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
