“உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்” – தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுரை
புதுடில்லி: “சிஜேபி தொடர்பான விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்மறை எதிர்வினையாற்ற வேண்டாம்” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கின் விசாரணையின்போது, வேலை இல்லாத சில இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் கரப்பான்பூச்சிகளைப் போல ஊடுருவி நீதித்துறையை தாக்குவதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் வாய்மொழியாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, “காக்ரோச் ஜனதா கட்சி” என்ற பெயரில் ஆன்லைனில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சமூக ஊடக பக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் வாய்மொழியாக கூறப்பட்ட கருத்துகளை வர்த்தக மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும், சிஜேபி தொடர்பான செயல்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி.எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி வாதாடுகையில், “சமூக ஊடகங்களில் நடைபெறும் செயல்பாடுகள் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், “இந்த விவகாரத்தை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக்கொண்டு எதிர்மறை வினையாற்ற வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்திருந்த தலைமை நீதிபதி, “போலி மற்றும் தவறான பட்டங்கள் பெற்றவர்களை தான் குறிப்பிட்டேன்; இளைஞர்களை விமர்சிக்கவில்லை” என்றும் தெரிவித்திருந்தார்.
