செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் திடுக் தகவல்; உ.பி. தாக்குதல் திட்டம் அம்பலம்
புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், பயங்கரவாதிகள் உத்தர பிரதேச சட்டசபை உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி டில்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் நபி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரித்தது. விசாரணையில், டாக்டர் உமர் நபி மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை நிறைவடைந்த நிலையில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்களின் படி, செங்கோட்டை தாக்குதலுக்கு முன்பாக உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் பயங்கரவாதிகள் உளவு பார்த்திருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் முசம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹரியானாவின் பரிதாபாதில் இருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு உத்தர பிரதேச சட்டசபை, தலைமைச் செயலகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இமாம்பாரா, லால் பாக், அமினாபாத் உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்” என்றார்.
மேலும், “இந்த இடங்களில் வெடிகுண்டு நிரப்பிய கார்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், டில்லி செங்கோட்டை தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பெராக்சைடு வெடிப்பொருள் தயாரிக்க தேவையான ரசாயனங்களையும் லக்னோவில் அவர்கள் வாங்கியிருந்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
