சென்னை: “மதுபான ஆலைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். விதிமீறல்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் செயல்பாடுகள் தொடர்பாக, சென்னையில் நேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் விக்னேஷ் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் துறை ஆணையர் கார்த்திகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் விக்னேஷ், “மனமகிழ் மன்றங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து தணிக்கை செய்து உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், “கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதற்காக தீவிர கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
அதேபோல், “மதுபான ஆலைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதை கலால் மேற்பார்வை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
“ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மட்டுமல்லாமல், அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்தார்.
