வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை வெளிப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ரகசிய பிரிவு போலீசாரின் பதிலடி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடந்த சில மாதங்களாக பல்வேறு மிரட்டல்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பியிருந்தார்.
மேலும், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி டிரம்பை கொல்ல முயற்சி நடைபெற்றதாகவும், அதில் தொடர்புடைய நபரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை டிரம்பை குறிவைத்து தாக்குதல் முயற்சி நடந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியை நோக்கி ஆயுதங்களுடன் வந்த ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க ரகசிய பிரிவு போலீசார் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சண்டையில் பலத்த காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்ததாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ரகசிய பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
