புதுடில்லி: வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டில் வன்முறையைத் தூண்டி மோடி அரசை கவிழ்க்க லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சதி செய்கிறார் என்று பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மோடி அரசு ஓராண்டுக்குள் கவிழும்” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜ தலைவர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் ராகுல் காந்தியை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் மற்றும் ‘டூல்கிட் கும்பல்’ இணைந்து இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டுள்ள ஒரு பெரிய சதியை வெளிப்படுத்துகிறது. இது சாதாரணமான விஷயம் அல்ல. நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சி.
நேரடி தேர்தலில் பாஜவை தோற்கடிக்கவோ அல்லது மோடி அரசை ஆட்சியில் இருந்து அகற்றவோ முடியாது என்பதை உணர்ந்த ராகுலும் அவரது கூட்டாளிகளும் நாடு முழுவதும் வன்முறையைத் தூண்ட முயற்சித்து வருகின்றனர்.
நாட்டில் நடைபெறும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
