Russia மற்றும் Ukraine இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் Kyiv மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை குறிவைத்து ரஷ்யா மிகப்பெரிய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் தரப்பின் தகவலின்படி, இந்த தாக்குதலில் 90 ஏவுகணைகள் மற்றும் 700 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அதிநவீன ‘ஒரேஷ்னிக்’ ஹைப்பர்சோனிக் ஏவுகணையையும் ரஷ்யா பயன்படுத்தியதாக Volodymyr Zelenskyy குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் போரில் இந்த ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவது இது மூன்றாவது முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக கீவ் நகரில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு European Union கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கைத் தலைவர் Kaja Kallas கூறுகையில், “ரஷ்யா போர்க்களத்தில் முன்னேற முடியாமல் முட்டுக்கட்டையை சந்தித்துள்ளது. அதனால் தான் உக்ரைன் நகரங்களை குறிவைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் தாக்குதல்களை நடத்துகிறது,” என்றார்.
மேலும், “இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களை கொல்லும் நோக்கில் நடத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
‘ஒரேஷ்னிக்’ ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெடி பொருட்களுடன் அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வழக்கமான வெடி பொருட்களே பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
