தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் த.வெ.க. நிர்வாகிகள் ஆய்வு நடத்துவதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் ஒன்றிலும் த.வெ.க. வெற்றி பெறவில்லை. அந்த மாவட்டத்தில் அக்கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையிலும், மாவட்ட செயலர் நியாஸ் மற்றும் கட்சியினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் தலையிட்டு அதிகாரம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கட்சியினருடன் சென்ற நியாஸ், அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், த.வெ.க. மருத்துவர் அணி செயலர் வாசுதேவி, மருத்துவர் உடையில் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் த.வெ.க. நிர்வாகிகள் சமையலறை வரை சென்று உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரசு அதிகாரிகளோ அல்லாதவர்களுக்கு இத்தகைய ஆய்வு நடத்த அதிகாரம் யார் வழங்கியது?” என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து தென்காசி கலெக்டர் Kamal Kishore கூறுகையில், “இதுபற்றி புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
