ராமநாதபுரம்: பத்திரப்பதிவு செய்து தர ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ராமநாதபுரம் சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ராமநாதபுரம் நகரில் உள்ள ஒரு சொத்தை பதிவு செய்வதற்காக ஒருவர் சார் பதிவாளர் ராமநாதனை அணுகியதாக கூறப்படுகிறது.
இந்த பணியை செய்து முடிக்க ரூ.50 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என சார் பதிவாளர் ராமநாதன் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு சம்மதிக்காத அந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, இடைத்தரகர் அயூப் கான் மூலம் பேசப்பட்ட ரூ.50 லட்சத்தில் முதல் தவணையாக ரூ.25 லட்சம் சார் பதிவாளர் ராமநாதனிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கூடுதலாக ரூ.3 லட்சம் பெற்றபோது, சார் பதிவாளர் ராமநாதன் மற்றும் இடைத்தரகர் அயூப் கான் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
