இனப்படுகொலை நடத்தும் நாடு பாகிஸ்தான்: ஐநாவில் இந்தியா கடும் தாக்கு
ஐக்கிய நாடுகள்: ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானின் செயல்களை கடுமையாக விமர்சித்த இந்தியா, “தன் சொந்த மக்கள் மீதும் குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தும் நாடு பாகிஸ்தான்” என ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளது.
ஆயுத மோதல்களில் பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான விவாதம், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் நிரந்தர தூதர் Harish Parvathaneni கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், “இனப்படுகொலை சம்பவங்களின் நீண்டகால களங்கமான வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. அந்நாடு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை பற்றி பேசுவது முரண்பாடானது” என்றார்.
மேலும், “ஐநா அமைப்பின் ஆய்வின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட எல்லை தாண்டிய வன்முறை தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானில் 750 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான தாக்குதல்கள் வான்வழி மூலம் நடத்தப்பட்டவை” என்றும் கூறினார்.
ஐநா ஆவணங்களின் படி, ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்த 95 சம்பவங்களில் 94 சம்பவங்களுக்கு பாகிஸ்தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ரமலான் காலத்தில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலை உலக நாடுகள் மறக்கவில்லை என்றும், அந்த தாக்குதலில் 269 பேர் உயிரிழந்ததுடன் 122 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
“எந்த வகையிலும் ராணுவ இலக்காக கருத முடியாத இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தொழுகை முடித்து மசூதியில் இருந்து திரும்பியவர்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது” எனவும் அவர் கூறினார்.
சர்வதேச சட்டங்களை மதிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குவது பாசாங்குத்தனமான செயல் என்றும், பாகிஸ்தானின் இத்தகைய செயல்கள் ஆச்சர்யமளிப்பதில்லை என்றும் Harish Parvathaneni தெரிவித்தார்.
