சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அபின் தினேஷ் மோதக்கை புதிய போலீஸ் கமிஷனராக நியமித்திருந்தது.
முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, தமிழகத்தில் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அபின் தினேஷ் மோதக், சிபிசிஐடி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக அமல்ராஜை சென்னை புதிய போலீஸ் கமிஷனராக தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பு அமல்ராஜ் தாம்பரம் போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் காலத்தில் அவர் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அமல்ராஜ், திருப்பூரில் ஏஎஸ்பியாக தனது போலீஸ் பணியை தொடங்கினார். பின்னர் மதுரை ரூரல், தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றியுள்ளார்.
மேலும் சேலம், திருச்சி, கோவை மாநகரங்களில் போலீஸ் கமிஷனராகவும், திருச்சி, ராமநாதபுரம், சேலம் பகுதிகளில் டிஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். போலீஸ் அகாடமி இயக்குனராகவும் அமல்ராஜ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
