தேவகோட்டை: பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், ஆட்டோ டிரைவர் மீது பாலியல் புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பணியில் இருந்த போலீசார் அவரது புகாரை உடனடியாக பதிவு செய்யாமல் அலட்சியமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணை ஒரு ஸ்டேஷனில் இருந்து மற்றொரு ஸ்டேஷனுக்கு அனுப்பி அலைக்கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், கீதாலட்சுமி, இரு பெண் சிறப்பு எஸ்.ஐ.க்கள் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு உள்ளிட்ட மொத்தம் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
