சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான கொள்கை நிலைப்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் K. G. Arunraj தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வு என்பது மாணவர்களின் உரிமைக்கு எதிரானது. நீட் வேண்டாம் என்பதே எங்களின் கொள்கை முடிவு,” என்று கூறினார்.
மேலும், மருந்து விற்பனையாளர்கள் அறிவித்துள்ள கடையடைப்பை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மற்றும் தனியார் மருந்தகங்கள் உள்ளிட்ட சுமார் 5,000 மருந்தகங்கள் நாளை திறந்திருக்கும் என கூறப்பட்டது.
தமிழகம் முழுவதும் சுமார் 50,000 மருந்தகங்கள் உள்ள நிலையில், அவற்றில் 5,000 கடைகள் இயங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ உதவி தேவைப்படும் பொதுமக்களுக்காக மாவட்ட வாரியாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
ஒவ்வொரு உதவி இயக்குநரின் கீழும் இரண்டு மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, அவசர தேவைகளை கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மருந்தக உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிட்டார்.
