சென்னை: எங்கள் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் Rajmohan தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விக்கான நிதியை வழங்கவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த மறைமுக அழுத்தத்திற்கும் தமிழக அரசு அடிபணியாது. எங்கள் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்றார்.
பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசின் கல்விக் கொள்கையில் உறுதியான நிலைப்பாடு தொடரும் என தெரிவித்தார்.
மேலும், பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பில் எந்தவித குறைப்பாடும் இருந்தால் சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
ஆசிரியர்களின் பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொது நலனில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
