23 வயதில் பிரிட்டன் மேயராக இந்திய வம்சாவளி இளைஞர் தேர்வு
லண்டன்: பிரிட்டனில் 23 வயதான இந்திய வம்சாவளி இளைஞர் Tushar Kumar மேயராக தேர்வு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு பிரிட்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹம்வுட் நகரத்தின் மேயராக துஷார் குமார் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம், பிரிட்டனின் மிக இளைய இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
20 வயதில் தொழிலாளர் கட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட துஷார் குமார், 2023ஆம் ஆண்டு எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹம்வுட் நகர சபையில் உறுப்பினராக இணைந்தார். பின்னர் துணை மேயராக பணியாற்றிய அவர் தற்போது நகரத்தின் உயரிய மேயர் பதவியை ஏற்றுள்ளார்.
கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட போது, அவர் King’s College London-ல் அரசியல் துறையில் இளங்கலை படிப்பின் இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேயராக பொறுப்பேற்ற பிறகு துஷார் குமார் வெளியிட்ட அறிக்கையில், “எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹம்வுட் நகரத்தின் மேயராக பொறுப்பேற்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். 23 வயதில் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளைய இந்திய வம்சாவளி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது குடும்பத்திற்கு இந்தியாவில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும், எதிர்காலத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமர் Rishi Sunak போல பிரிட்டன் பிரதமராக வேண்டும் என்பது தனது இலட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
துஷார் குமார் தனது 10 வயது வரை ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் வசித்து வந்தார். பின்னர் அவரது பெற்றோர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர். அவரது தாயார் பர்வீன் ராணியும் ஹெர்ட்ஸ்மியர் போரோ கவுன்சிலில் பணியாற்றி வருவதுடன், துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
