“இந்திய இளைஞர்களை விமர்சிக்கவில்லை” – தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம்
புதுடில்லி: “இந்திய இளைஞர்களை நான் விமர்சித்ததாக கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வாய்மொழியாக தெரிவித்த கருத்துகளை சில ஊடகங்கள் தவறாக திரித்து வெளியிட்டுள்ளன. இது கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “போலி சான்றிதழ்கள் மூலம் சட்டத் துறையிலும் மற்ற துறைகளிலும் நுழையும் சிலரைப் பற்றியே நான் விமர்சித்தேன்” என்றும் கூறியுள்ளார்.
“அதேபோன்ற நபர்கள் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற துறைகளிலும் உள்ளனர். அவர்கள் ஒட்டுண்ணி போன்றவர்கள்” என்றும் குறிப்பிட்டார்.
“இதனை அடிப்படையாக வைத்து, நாட்டின் அனைத்து இளைஞர்களையும் நான் விமர்சித்ததாக கூறுவது முற்றிலும் தவறானது” என்றும் சூர்யகாந்த் தெரிவித்தார்.
தொடர்ந்து, “தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்திய இளைஞரும் நாட்டிற்கு உத்வேகம் அளிக்கின்றனர்” என்று கூறினார்.
“நமது நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் இளைஞர்களை நம்பியே உள்ளது. அவர்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நான் பெருமை கொள்கிறேன். வளர்ந்த இந்தியாவின் தூண்களாக அவர்களை பார்க்கிறேன்” என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
டில்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி அமர்வு விசாரித்தது.
அப்போது, “வேலையில்லாத சிலர் ஒட்டுண்ணி மற்றும் கரப்பான் பூச்சிகளைப் போல பல துறைகளில் நுழைந்து விமர்சித்து வருகின்றனர்” என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
