“ரூ.10.50 லட்சம் கோடி கடன் பேச்சு உண்மைக்கு புறம்பானது” – தங்கம் தென்னரசு
சென்னை: தமிழகத்திற்கு ரூ.10.50 லட்சம் கோடி கடன் உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா கூறியது உண்மைக்கு புறம்பானதும், அடிப்படை புரிதல் இல்லாத கருத்துமாகும் என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “முந்தைய அரசு ரூ.10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளது. கடன் நிலவரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலளித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், “முற்றிலும் உண்மைக்கு புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமலும் தொழில்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஆதாரமில்லாமல் மக்களிடையே தவறான மாயப்பிம்பத்தை உருவாக்க சமூக வலைதளங்கள் மூலம் முயற்சி செய்வது விஷமத்தனமான செயல்” என்றும் விமர்சித்துள்ளார்.
“அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை குழப்பும் வகையில் தமிழகத்தின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டி பேசுவது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், “அமைச்சரவையில் அனுபவமிக்க நிதி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோர் தொழில்துறை அமைச்சரின் தவறான கருத்துகளுக்கு முறையான விளக்கம் அளிப்பார்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அல்லது பொய்யும் புனைகதைகளும் நிறைந்த மலிவான பிரசாரங்களுக்கு துணைபோகிறார்களா?” என்றும் தங்கம் தென்னரசு தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
