சென்னை: தவெக மற்றும் அக்கட்சியின் பெண் தொண்டர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக ஆதரவு பேச்சாளர் பொன்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரசியல் விமர்சகராகவும், ஊடக விவாதங்களில் திமுக ஆதரவு பேச்சாளராகவும் அறியப்படும் பொன்ராஜ், இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, தவெக பெண் தொண்டர்கள் குறித்து அவதூறாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பொன்ராஜ் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக தேர்தலுக்கு முன், தவெக தலைவர் விஜய் நேரில் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். மேலும், பொன்ராஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறிய பொன்ராஜ், அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.
அதேநேரத்தில், தவெக தொண்டர்கள் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, விஜய் மீது பொன்ராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தவெக பெண் தொண்டர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பொன்ராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனுடன், சென்னை பகுதிகளிலும் பொன்ராஜ் மீது தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
