மதுரை: “தமிழகத்தில் இருந்து ஒருவர் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால், அது திராவிட ஆட்சி தான்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை இருந்து மதுரைக்கு வந்த கமல்ஹாசன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, முதல்வர் விஜயின் ஆட்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இரண்டு நாட்களிலேயே ஒரு ஆட்சியை பற்றி கருத்து சொல்வது ஜோதிடமாக தான் இருக்கும்” என்று கூறினார்.
மேலும், “விஜய்க்கு குறைந்தது ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அரசில் புதியவர்கள் பலர் வந்துள்ளனர். அவர்களை குறைவாக மதிப்பிடவும் கூடாது; அதே நேரத்தில் அளவுக்கு மீறி எதிர்பார்க்கவும் கூடாது” என்றும் தெரிவித்தார்.
“மக்களாகிய நீங்கள் தான் விஜய்க்கு வாக்களித்தீர்கள். எனவே அவர்களை நீங்கள் தான் கண்காணிக்க வேண்டும். நாங்களும் அதை கவனித்து கொண்டிருக்கிறோம்” என்று கமல் கூறினார்.
தமிழகத்தில் திராவிட கட்சி அல்லாத புதிய கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறப்படுவது குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் இருந்து ஒருவர் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால், அது திராவிட ஆட்சி தான்” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கூறிய “கமல் முதல்வராக வந்தாலும் பொறாமைப்பட மாட்டேன்” என்ற கருத்து குறித்தும் கமல் பதிலளித்தார்.
“நாங்கள் இருவரும் போட்டியிடுவோம்; ஆனால் அது பொறாமை அல்ல. நாங்கள் தமிழ்நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்கள் போல. விளையாட்டு துறையில் இருந்திருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்” என்று அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்னைகள் குறித்து கேட்கப்பட்டபோது, “உங்களைப் போல நானும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
