ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பிசிசிஐ வராது; மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) கீழ் வராது என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு, பிசிசிஐயை பொது நிறுவனம் என அறிவித்த மத்திய தகவல் ஆணையம், அப்போது அந்த அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளருக்கு ஆர்டிஐ அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் மனுக்களை பெற்று பதிலளிக்கும் நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும் என கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய தகவல் ஆணையம் மனுவை மீண்டும் பரிசீலித்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையடுத்து மீண்டும் விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையம், 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், பிசிசிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளது.
அரசின் கண்காணிப்பு பிசிசிஐ செயல்பாடுகளை மேம்படுத்தும் என கருதுவது பொருத்தமற்றது என்றும், அரசின் கட்டுப்பாடு பிசிசிஐயின் பொருளாதார அமைப்பை பாதிக்கக்கூடும் என்றும் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா குழுவின் சீர்திருத்த பரிந்துரைகள் ஆலோசனை மட்டுமே என்றும், அவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-இல் உள்ள சட்ட விதிகளை மீற முடியாது என்றும் மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
