சிக்கன நடவடிக்கை ஆரம்பம்: புல்லட்டில் அலுவலகம் சென்ற பட்னவிஸ்
மும்பை: தேவேந்திர பட்னவிஸ், எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாதுகாப்பு வாகன பயன்பாட்டை குறைத்து, புல்லட் மோட்டார் சைக்கிளில் முதல்வர் அலுவலகம் சென்றார்.
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் பதற்ற சூழல் காரணமாக பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநில முதல்வர்களும் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த தொடங்கியுள்ளனர்.
மஹாராஷ்டிராவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக பங்கேற்கும் ஆலோசனை கூட்டங்களை முதல்வர் பட்னவிஸ் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரசு ஊழியர்களுடன் நடைபெறும் கூட்டங்களை இணையவழி மூலம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், புதிய வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள தனது இல்லமான ‘வர்ஷா’வில் இருந்து முதல்வர் அலுவலகத்திற்கு தேவேந்திர பட்னவிஸ் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் மாநில அமைச்சர் ஆஷிஷ் ஷேலார்வும் பயணம் செய்தார்.
இதற்கிடையில், இந்திய தேசிய காங்கிரஸ் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளது. பட்னவிஸ் பயன்படுத்திய வாகனத்தின் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியானதாகவும், இது விளம்பர நோக்கத்திற்காக செய்யப்பட்ட செயல் என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
