“குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் விஜய்” – கவர்னரிடம் இபிஎஸ் தரப்பு புகார்
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்னை தொடர்பாக, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர், முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி கவர்னர் மாளிகையில் புகார் மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் அரசுக்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் வாக்களித்ததை தொடர்ந்து, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் தங்கள் அணியை சட்டசபையில் அங்கீகரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.
மற்றொரு புறம், அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் இபிஎஸ் எடுத்த முடிவின்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சட்டசபை கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த சூழலில், இபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் மற்றும் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் சென்னை கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கேரளாவில் இருந்ததால், அவரது செயலாளர் கிர்லோஷ் குமாரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “தமிழக முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவை இரண்டாக உடைக்கும் நோக்கில் ஒரு தரப்பினரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா சிவசேனா கட்சி பிளவு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை சட்டசபை கட்சித் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, “பொதுச்செயலாளர் உத்தரவுக்கு எதிராக ஒரு தரப்பினர் செயல்பட்டது குறித்து கவர்னர் மற்றும் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
