“காலத்தால் அழியாத சனாதன தர்மம்” – உதயநிதியை விமர்சித்த ஸ்ரீதர் வேம்பு
சென்னை: ஸ்ரீதர் வேம்பு, சனாதனம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் உதயநிதி ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதி செய்து வருகிறார் என்று விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. இளைஞரணி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். இருந்தாலும் மதப்பற்றுள்ள தமிழ் இந்துக்கள் அதிகமாக கோபமடையவில்லை. அதற்கு மொழி பயன்பாடே காரணம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழில் ‘சனாதனம்’ என்ற சொல் வழக்கமான பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு அந்த சொல் பரிச்சயமில்லை. ஆனால் ‘தர்மம்’ என்ற சொல் தமிழில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதே பொருளில் ‘அறம்’ என்ற சொல்லும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியில் ‘தர்மம்’ என்பது மதத்தை குறிக்கும். பொதுவாக ஹிந்து மதம், ஹிந்து தர்மம், சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது. ‘தர்மம்’ என்ற சொல்லை பயன்படுத்தி உதயநிதி பேசியிருந்தால் பரவலான எதிர்ப்பு எழுந்திருக்கும். அதனால் தான் தமிழில் பரவலாக பயன்படுத்தப்படாத ‘சனாதனம்’ என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், “இப்போது ‘சனாதனம்’ என்ற சொல்லை தமிழிலும் பிரபலப்படுத்தி, திமுகவுக்கு எதிரான மனநிலையை மேலும் அதிகரித்துள்ளார். திமுக ஒரு போதும் தனித்து பெரும்பான்மை பெற்றதில்லை. ஹிந்து தெய்வங்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களே திமுகவுக்கு எதிரான அலையை உருவாக்கின” என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
மேலும், “அதிமுக அந்த எதிர்ப்பை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது. தற்போது தமிழக வெற்றிக் கழகம் புதிய திமுக எதிர்ப்பு சக்தியாக உருவெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் பிரிந்திருந்த போதிலும், வலுவான கூட்டணி மற்றும் அதிக செலவுகள் இருந்தும் திமுக தோல்வியடைந்தது. கூட்டணி இல்லாமல் தவெக வெற்றி பெற்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உதயநிதி உறுதி செய்ய விரும்புகிறார். காலத்தால் அழியாத சனாதன தர்மம் அவரது விருப்பத்தை நிறைவேற்றட்டும்” என்று ஸ்ரீதர் வேம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
