ஈரான் நடிகையுடன் தொடர்பு சர்ச்சை: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குறித்து புதிய தகவல்
பாரிஸ்: இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் குறித்து புதிய சர்ச்சை ஒன்று பிரான்ஸ் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேக்ரான், தனது மனைவி பிரிஜிட்டைவிட 24 வயது இளையவர். பள்ளி ஆசிரியையாக இருந்த காலத்திலேயே இருவருக்கும் இடையே காதல் உருவாகி பின்னர் திருமணமாகியது உலகளவில் பெரும் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் தலைநகர் ஹானோயில் விமானத்தில் இருந்து இறங்கிய மேக்ரானை, அவரது மனைவி ஆக்ரோஷமாக தள்ளுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது அது வெறும் நகைச்சுவையான தருணம் என மேக்ரான் தரப்பு விளக்கம் அளித்திருந்தது.
ஆனால் தற்போது பிரான்ஸ் பத்திரிகையாளர் புளோரியன் டார்டிப் எழுதியுள்ள “An Almost Perfect Couple” என்ற புத்தகம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த புத்தகத்தில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த நடிகை கோல்ஷிப்தே பராஹானி உடன் மேக்ரான் ரகசிய தொடர்பில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேக்ரான் தனது மொபைல் போன் மூலம் அந்த நடிகைக்கு செய்தி அனுப்பியதாகவும், அதை பார்த்த பிரிஜிட் கடும் கோபமடைந்ததாகவும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜிட் மேக்ரான் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “நான் ஒருபோதும் என் கணவரின் மொபைல் போனை ஆராயவில்லை” என்று பிரிஜிட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் எந்த தகவலையும் வெளியிடவில்லை என பத்திரிகையாளர் வலியுறுத்தி வருவதால், இந்த விவகாரம் தற்போது பிரான்ஸ் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
