புதுடில்லி: மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் காரணமாக சர்வதேச அளவில் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், எரிபொருள் விலை உயர்த்தப்படலாம் என்றும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
