ஜெயலலிதா புகைப்படத்துடன் எம்எல்ஏவாக பதவியேற்ற செங்கோட்டையன்
தமிழக சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை தொடங்கிய நிலையில், புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்று வருகின்றனர். இந்த நிகழ்வில், தவெக அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்துடன் பதவியேற்றுக் கொண்டது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இடைக்கால அவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
முதலில் முதல்வர் சி. ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர்.
அதிமுகவில் நீண்டகாலம் செயல்பட்ட செங்கோட்டையன், சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தற்போது அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட செங்கோட்டையன், தனது சட்டைப்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார்.
தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதா புகைப்படத்தை தொடர்ந்து வைத்திருப்பதாகவும், அதற்கு விஜய் அனுமதி வழங்கியதாகவும் செங்கோட்டையன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
மேலும், “வேறு எந்த தலைவரும் இவ்வாறு அனுமதி வழங்க மாட்டார்கள்” என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது சட்டைப்பையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை வைத்திருந்ததும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
