தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதற்கான அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், எந்தக் கட்சிக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் தவெக நாடி வந்தது.
மறுபுறம், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேசமயம், திமுகவின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது குறித்து அதிமுக தரப்பும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகள் தனித்தனியாக செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி விவாதித்தன.
இதற்கிடையில், தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆதரவு கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இதன் மூலம் தவெக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்.எல்.ஏக்கள் சேர்த்து கூட்டணியின் மொத்த பலம் தற்போது 116 ஆக உயர்ந்துள்ளது.
ஆட்சியமைக்க இன்னும் இரண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக இன்று மாலை இணையவழி ஆலோசனையில் ஈடுபட உள்ளது. அந்தக் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
