தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைத்தால் அது பொதுமக்களிடையே பேரழிவுமிக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியான நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை எந்தக் கட்சியும் தனிப்பட்ட முறையில் பெறாததால், மாநில அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள பதிவில், “தவெக ஆட்சியமைக்காவிட்டால் வேறு எந்தக் கட்சி கூட்டணி அமைத்தாலும் பரவாயில்லை. ஆனால் யாரும் நினைக்க முடியாத வகையில் திமுக – அதிமுக கூட்டணி அமைந்தால் அது பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் அதிர்ச்சியையும் பேரழிவுமிக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அது யாருக்கும் நல்லதல்ல” என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற அரசியல் சூழல்கள் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அரசு அமைக்க அனுமதி வழங்கப்பட்டு பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், அதேபோல் தவெக தலைவர் விஜய்க்கு ஏன் ஆளுநர் ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கவில்லை என்றும் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
233 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில் அரசு அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், தவெக பெரும்பான்மை இடங்களை வென்றிருந்தும் ஆளுநர் தாமதப்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். டியர் விஜய், நீங்கள்தான் ஆட்சியமைக்க வேண்டும். ஒரு வாக்காளராக நான் இதை வேண்டிக் கொள்கிறேன்” என நடிகர் விஷால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
