ஐபிஎல் தொடரின் 50-ஆவது லீக் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை டக்வொர்த் லீவிஸ் முறையில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்தோல்வியிலிருந்து மீண்டது.
மழை காரணமாக போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னௌ அணிக்கு தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் அர்ஷின் குல்கர்னி சிறப்பான தொடக்கம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 95 ரன்கள் சேர்த்தனர்.
அர்ஷின் குல்கர்னி 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிகோலஸ் பூரன் களமிறங்கி மார்ஷுடன் இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்தார். இருவரும் சேர்ந்து 2-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.
அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிகோலஸ் பூரன் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் கேப்டன் ரிஷப் பந்த் 10 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். 19 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது.
டக்வொர்த் லீவிஸ் முறையில் பெங்களூரு அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜேக்கப் பெத்தெல் 4 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
இதையடுத்து தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் சேர்ந்து 95 ரன்கள் கூட்டணி அமைத்தனர். படிக்கல் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜிதேஷ் சர்மா 1 ரன்னில் வெளியேறினார்.
அதிரடியாக விளையாடிய ரஜத் பட்டிதார் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 40 ரன்கள் சேர்த்தாலும், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னௌ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னௌ அணியின் பந்துவீச்சில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
