கொல்கட்டா,
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை தடுக்க திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாங்குராவில் நடைபெற்ற பாஜ பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மேற்கு வங்க பெண்கள் அரசியலில் அதிக பிரதிநிதித்துவம் பெற விரும்பினர். அதற்காக 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முயற்சியை மேற்கொண்டோம் என்றும் தெரிவித்தார்.
ஆனால், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து, லோக்சபாவில் அந்த மசோதா நிறைவேறாமல் தடுத்ததாக குற்றம்சாட்டினார்.
இதன் மூலம் மேற்கு வங்க பெண்களின் அரசியல் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இது அவர்களுக்கான துரோகம் எனவும் கூறினார்.
மேலும், பழங்குடியின மற்றும் மலைப்பகுதி பெண்கள் அரசியலில் முன்னேறுவதை தடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜ ஆட்சியில், பழங்குடியின பெண் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தது முக்கியமான முன்னேற்றமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டபோது திரிணமுல் காங்கிரஸ் நடத்திய அணுகுமுறையை விமர்சித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்றும், பெண்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்வோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
