டெஹ்ரான்,
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலானது என ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தின் காரணமாக, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர், அந்த வழியாக சென்ற 20 சரக்கு கப்பல்கள் ஓமன் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த சூழ்நிலையில், ஈரான் ராணுவ படகுகள் சில எண்ணெய் கப்பல்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியக் கொடியுடன் சென்ற இரண்டு கப்பல்களும் அடங்கும். அவை சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கப்பல்களுக்கும், அதில் இருந்த பணியாளர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், முகமது பதாலி என்பவரை அழைத்து விளக்கம் கேட்டது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் இந்திய கப்பல்களின் விபரங்கள் முன்கூட்டியே பகிரப்பட்டிருந்ததாகவும், அதற்குப் பிறகும் தாக்குதல் நடந்தது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஈரான் தூதர், இந்த சம்பவம் தகவல் தொடர்பு பிழையால் ஏற்பட்ட தற்செயலானது என விளக்கம் அளித்தார்.
மேலும், இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் பயணிக்க தேவையான உறுதிமொழியை வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
