புதுடில்லி,
ஐந்து மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் புதிய கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சட்டவிரோதமான அல்லது தவறான தகவல்களை கொண்ட பதிவுகள் கண்டறியப்பட்ட 3 மணி நேரத்திற்குள் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது பெரும்பாலான பிரசாரம் சமூக ஊடகங்களில் நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:
- AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், அவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டவை என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
- அந்த உள்ளடக்கத்தை உருவாக்கிய நபர் அல்லது நிறுவன விவரங்களும் வெளிப்படையாக குறிப்பிடப்பட வேண்டும்.
- தவறான தகவல், சட்டவிரோத உள்ளடக்கம் போன்றவை 3 மணி நேரத்திற்குள் கட்டாயம் நீக்கப்பட வேண்டும்.
- தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அல்லது தவறான கருத்தை உருவாக்கும் பதிவுகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஓட்டுப்பதிவுக்கு முன் 48 மணி நேர அமைதி காலத்தில், சமூக ஊடகம், டிவி, ரேடியோ உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் தேர்தல் தொடர்பான பிரசாரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களின் பரவலை தடுக்கவும், தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ளன.
