டெஹ்ரான்: மேற்காசியாவில் நிலவி வந்த பதற்றம் குறைந்த நிலையில், உலக பொருளாதாரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வணிக கப்பல்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்த அனுமதி அடுத்த 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது.
இந்த நடவடிக்கையால், எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோக தட்டுப்பாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
பின்னர், அமெரிக்கா-ஈரான் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் லெபனான்-இஸ்ரேல் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் ஆகியவற்றின் பின்னணியில், கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச கப்பல்கள் அனைத்தும் ஈரான் கடல்சார் அதிகாரிகள் அறிவித்துள்ள குறிப்பிட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
