புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.
மகளிருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொகுதி மறுவரையறை அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு அரசியல் ஆதாயம் தேடுகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும், தற்போதைய சட்ட முன்னெடுப்பு மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு அரசியல் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் மேக்வால் பேசியதாவது: “இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு அவர்களுக்கான உரிமையை வழங்குவதே ஆகும். இந்த திட்டம் மக்களவையை விரிவுபடுத்துவதை சார்ந்துள்ளது.
அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து 815 ஆக உயரும். அதில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்த முடியும். இது எளிய சூத்திரம். இதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆண்களுக்கோ அல்லது எந்த மாநிலத்திற்கோ பாதிப்பு ஏற்படாது. எதிர்காலத்தில் அரசுகளின் வலிமையும் நிலைத்திருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
