ஆண்டிபட்டி: “தேர்தலில் முதலீடு செய்பவர்கள் லாபம் பெறவே நினைப்பார்கள்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
ஆண்டிபட்டி தொகுதியில் வனத்துறை பிரச்சினை, கண்ணகி கோவிலுக்கு செல்ல வழியின்மை, வருஷநாடு பகுதியில் 80 கிராமங்களை அப்புறப்படுத்தும் திட்டம் போன்ற பல பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
மலைகளை கல் குவாரிக்காக வெட்டி எடுத்துச் செல்ல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 200 டன் வெடி மருந்துகள் வைத்து மலைகள் தகர்க்கப்படுகின்றன. அப்போது மட்டும் வனத்துறையில் காட்டு விலங்குகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
ஓட்டுக்கு பணம் வழங்கும் போது ஜனநாயகம் சாகி, பணநாயகம் வெற்றி பெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற முதலீடு செய்பவர்கள், அதை பல மடங்கு லாபமாகப் பெறவே முயற்சிப்பார்கள்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தனர்? இலவசங்களை மட்டும் நோக்கி சென்று உங்கள் தன்மானத்தை இழக்க வேண்டாம்.
எத்தனை காலம் இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடப் போகிறீர்கள்? இந்த இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா? கொலை, கொள்ளை நிறுத்தப்படுமா? அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டும் ஒரே மாதிரியான கட்சிகள் தான்.
ஆண்டிபட்டியில் கூட இரு கட்சிகளிலும் வேட்பாளர்களாக அண்ணனும் தம்பியும் போட்டியிடுகின்றனர். இது தான் ஜனநாயகமா?
“நீங்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக நான் குரல் கொடுத்து வருகிறேன்; மீண்டும் அந்த தவறை செய்யாதீர்கள்,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
