வாஷிங்டன்: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில், லெபனான் அரசுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சு இன்று நடைபெற உள்ளது.
ஈரான் மீது கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் எதிர்விளைவாக, உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.
இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வும் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதற்காக, 10 அம்ச நிபந்தனைகளை ஈரான் முன்வைத்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் ஜலசந்தி திறப்பு குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன.
இந்த பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு புறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
அமைதி பேச்சுக்கான நிபந்தனையாக, லெபனானில் ஹெஸ்பொல்லா மீது தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்தியிருந்தது. ஆரம்பத்தில் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்திருந்தாலும், தற்போது லெபனான் அரசுடன் பேச்சு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானுடன் உறவை மேம்படுத்தும் நோக்கில் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த முன்னேற்றத்தின் பின்னணியில், அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சும் முன்னேறி, பிராந்திய பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
