திருப்பூர்: 2021 சட்டசபை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாததால், தி.மு.க. அரசு தங்களை ஏமாற்றியுள்ளது என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், “விடியல் தருவேன்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்வதாக கூறிய முக்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என்றார்.
இதனால், 12,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பணிநிரந்தரம் செய்யப்பட்டிருந்தால், காலமுறை ஊதியத்தின் கீழ் சுமார் ரூ.30,000 வரை சம்பளம் கிடைத்திருக்கும் நிலையில், தற்போது வெறும் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
மேலும், போனஸ், மருத்துவ காப்பீடு, பி.எப்., பணிக்கொடை, பென்சன் உள்ளிட்ட எந்த அரசு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதற்குப் பதிலாக, காலியாக உள்ள உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கம்ப்யூட்டர் அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடப்பிரிவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“விடியல் தருவோம் என்று நம்பிக்கை கொடுத்து, எங்களை இருளில் தள்ளியுள்ளது தி.மு.க. அரசு” என்றும், கடந்த தேர்தல் வாக்குறுதியே நிறைவேற்றப்படாத நிலையில், தற்போதைய தேர்தலில் கூட இந்த விவகாரம் குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
