ஊட்டி: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த பயனும் இல்லாத ஆட்சி நடைபெற்றுள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு “பேக்பெஞ்சர் ஆட்சி” எனவும் பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டசபை தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், சொத்துவரி மற்றும் மின்சார கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இது சட்ட ஒழுங்கு நிலைமையின் சீர்கேட்டை காட்டுகிறது என்றும் கூறினார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், பொதுமக்களுக்கு தேவையான சிலிண்டர் விநியோகம் தட்டுப்பாடின்றி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பல முறை ஆட்சியில் வெற்றி பெற்றுள்ளதாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுடன் வலுவாக பேசி மாநில நலன்களை பாதுகாத்தார் என்றும் குறிப்பிட்டார். அதேசமயம், தி.மு.க. மாநில நலன்களை விட்டுக்கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தி.மு.க. அடிமைத்தனத்தை பற்றி பேசுவதற்கு தகுதியற்ற கட்சி என்றும் அவர் விமர்சித்தார்.
பா.ஜ. வேட்பாளர் போஜராஜனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், வெற்றி பெற்றால் ஊட்டி மார்க்கெட் பிரச்னை தீர்வு, ஹெத்தையம்மன் கோவிலில் வெளிநுழைவு தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
படுக சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான எஸ்.டி. அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
